செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது.
மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 129 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா,  மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது. தலைநகர் டெல்லி, சண்டிகரை நள்ளிரவு  புயல் தாக்கியது. டெல்லி பல பகுதிகளில் இடி, மிண்டலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் டெல்லி மாநகரம் இருளில் மூழ்கியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, டெல்லியில், இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் பிளாட்பார்மில் நிறுத்திவைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
181 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன