
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் நன்றி’.
இவ்வாறு பிரபு கூறினார்.
“தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர், தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர், கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
