செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

 

பாளம்பாளமா பூமி வெடிச்சி காஞ்சிப்போயிருந்த பூமிமேல ஒரு லாரி தண்ணிய ஊத்தினா எப்படி இருக்கும்…

ஊத்துன தண்ணிய பூமி உறுஞ்சும் பாருங்க… ஒரு வேகம்… அப்படி இருக்கு கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம் படம்.

ஹீரோயின் சதை மேல நம்பிக்கை வைக்காம குடும்ப செண்ட்டிமெண்ட் கதை மேல நம்பிக்கை வைச்சி ரத்தம் காட்டாம… வில்லனோட சத்தம் இல்லாம ஜாலியா படம் தொடங்கி முடியிறவரை வேல்ராஜின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல்னு வயல்… டிராக்டர்… கலகல கூட்டுக்குடும்பம் அதுல வர்ற மாமன் மச்சான் சண்டை என காட்டி ரொம்பவே ரசிக்க வைச்சிருக்கார் இயக்குனர் பாண்டியராஜ்.

என்னதான் பணம் காசு படிப்பு இருந்தாலும் விவசாயம் தான் தலைமுறையை காப்பாற்றும். விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும். விவசாயம் வளர்ந்தால் நாடு சீக்கிரமே வல்லரசாக மாறிவிடும் என்கிற நெத்தியடி விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

“சொத்து சேக்குறீங்களோ இல்லியோ சொந்தங்களை சேருங்க”விவசாயி என பெருமைபடுங்கள் என்று சொல்வதோடு விவசாய பெருமைகளை ஒரு கமர்சியல் படத்தில் வியாபார பொருளாக காட்டி ரசிகர்களுக்கு கார்த்தி நல்ல விருந்து கொடுக்கிறார்.

அரிசி பானையில கையவிட்டு அரிசிய அள்ளி தெளிச்ச மாதிரி ஒவ்வொரு பிரேமிலும் அவ்ளோ நடிகர், நடிகைகள்.

இவ்வளவு நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் படம் எங்கயும் நிக்காம … டிராக் மாறாம போகுது.

கார்த்தியின் திரையுலக பயணத்தில் கடைக்குட்டி சிங்கம் தனி இடம் பிடிக்கும். சினிமாவையே விரும்பாதவர்களை கூட விவசாயியாக கார்த்தி திரும்பி பார்க்க வைப்பார்.

சண்டை காட்சிகளில் கார்த்தி புதுசாக தெரிகிறார். குறிப்பாக ரத்தம் இல்லை, குத்து வெட்டு கொலை சோகம் இல்லாமல் சண்டை காட்சிகளையும் ரசிக்க வைக்கிறார் கார்த்தி.

சத்யராஜ்… அப்பா தாத்தா கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.
நல்ல கம்பீரமான கேரக்டர்.

பொன்வண்ணன், பானுப்ரியா, மனோபாலா, மனோஜ்குமார், இளவரசு, ஸ்ரீமன், சாயிஷா, விஜி, சந்துரு, ஜான்விஜய், மோனிகா, யுவராணி, சவுந்தர்ராஜன், பசங்க பாண்டி என ஏராளமான நடிகர் நடிகை இருந்தாலும் அவஙகளுக்கு தமிழ்ல கேரக்டர் பேர் வைத்து அதிலும் புதுமை செய்திருக்கிறார் இயக்குனர்.

ரொம்ப பேச விடாம அதே நேரம் தேவையான இடத்தில் பேச வைத்து சூரி கேரக்டரையும் ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.

 

இமான் இசையும் பின்னணி இசையும் பட வெற்றிக்கு பலம் சேர்க்கிறது.

சூர்யா தயாரிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் பெயரைப்போலவே குட்டி சிங்கம் தான்.

டிக்கெட் காசுக்கு வஞ்சம் இல்லாமல் ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ்.

மொத்தத்தில் கடைக்குட்டி சிங்கம் திருப்தி..!

– கோடங்கி

733 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன