ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

மனுசங்கடா விமர்சனம்

 

 

ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் யதார்த்தங்களும், வாழ்வியல் நிஜங்களும் திரைப்படங்களாக வந்து உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவும் சளைத்தது இல்லை என குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி சமீபத்திய பரியேறும் பெருமாள் படம்வரைக்கும் பல படங்கள் இந்த வாழ்வியல் வலியை ரத்தமும் சதையுமான மனிதர்களின் நிஜத்தை செல்லுலாய்டில் பதித்து கண்முன்பாக நிறுத்தியது.
அந்த வரிசையில் இணைந்திருக்கிற படம் மனுசங்கடா…. பிழைப்புக்காக கிராமத்தில் இருந்து சென்னையில் வேலை செய்கிற மகன்… ஒரு நள்ளிரவில் திடீரென அப்பா இறந்து விட்டதாக தகவல் வருகிறது. அவசர அவரசமாக கிராமத்துக்கு வருகிறான் மகன். அங்கே இறந்து கிடக்கும் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பொதுப்பாதையை பயன்படுத்தக் கூடாது ஆதீக்க ஜாதியினர் தடுக்கிறார்கள்.

உடலை அடக்கம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு சட்டப்படி போராட முடிவு செய்து நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கிறான் மகன். அதில் உத்தரவும் அவனுக்கு சாதகமாகவே வருகிறது.
நீதிமன்ற உத்தரவு இருந்தும் காவல்துறையும், வருவாய் துறையும், ஆதீக்க ஜாதியினரும் இறந்தவர் உடலை பொதுப்பாதையில் கொண்டு சென்று புதைக்க அனுமதித்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.


நகர வாழ்க்கையில் இருக்கிற பெரும்பாலானவர்களுக்கு இந்த மனுசங்கடா கதையும், கதைக்களமும், அந்த சோகமும் ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனால், அத்தனை நாகரீகம் மிளிர்ந்தபோதும் இன்னமும் பல குக்கிராமங்களில் இந்த தீண்டாமை நாகம் படமெடுத்து ஆடிக் கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் பலரை கொத்தி விஷத்தை கக்கி கொன்று கொண்டுதான் இருக்கிறது.
இறந்து 3 நாட்கள் ஆன பிறகும் அப்பாவின் உடலை அடக்கம் பண்ண முடியாமல் தவிக்கும் மகனாக ராஜீவ்காந்தி மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவரது இயலாமையை கோபமாக வெளிப்படுத்தி கடைசியில் உடைந்து கதறி அழும் காட்சிகளில் கண்டிப்பாக பார்ப்பவர்கள் நெஞ்சம் பதறும்.
ஒரு வரி கதையை மிக வலியோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அம்ஷன்குமார். பிஎஸ் தரணின் ஒளிப்பதிவும், அரவிந்த் ஷங்கரின் இசையும் கதைக்கு பலம் சேர்க்கிறது.
கசப்பு மருந்துதான் கதையின் கரு என்றாலும் அதையும் கொஞ்சம் கமர்சியல் எனும் தேன்தடவி கொடுத்திருந்தால் திரைக்கதையில் இன்னும் பலம் சேர்ந்திருக்கும். அதோடு வணிக ரீதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
படம் தொடங்கியதில் இருந்தே மிக மெதுவாகவே நகர்கிறது. அதைப்போலவே பல காட்சிகளிலும் வசன உச்சரிப்பிலும் ஏனோ ஒரு தயக்கம் இருப்பதுபோன்றே தெரிகிறது இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாக மனுசங்கடா இன்னும் அதிகம் கவனம் பெற்றிருப்பான்.
ஹீரோவின் காதலியாக நடித்திருக்கிற ஷீலாவும் தன் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
குக்கிராமத்தின் கோர முகத்தை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிற படம் மனுசங்கடா. நிஜத்தை விரும்புகிறவர்களும், சமூக அவலத்தை தோலுரிக்க நினைப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

கோடங்கி

590 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன