
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் எந்தவொரு தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைவசம் உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போன விரக்தியில் அவர்கள் பேசுகின்றனர்.

வடகிழக்கு பருவமழை குறித்தும், வர இருக்கிற கஜா புயலால் சராசரி அளவை காட்டிலும் அதிக பாதிப்புகள் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டும் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பதவி கொடுத்தவர் சசிகலா என்று தினகரன் கூறுகிறார். எனக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதாதான். எங்களுக்கு அரசியல் ரீதியான எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இரட்டை இலையை வெற்றி சின்னமாக மாற்றுவோம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
