“வந்தா ராஜாவாதான் வருவேன்” ரசிகன் கொடுக்கும் காசுக்கு குறை வைக்க மாட்டான்..! – கோடங்கி விமர்சனம்

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வழக்கமான இயக்குனர் சுந்தர்.சியின் படம். சிம்புவின் நடிப்பை மீட்டர் தாண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் சுந்தர்.சி மீண்டும் ஜெயித்திருக்கிறார்.
விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு லைட்டா கதை சொல்லிட்டு போகலாம்…
வெளிநாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அதிபதி நாசர். அவருடைய மகன் சுமன், பேரன் சிம்பு. நாசரின் விருப்பத்தை மீறி ஒரே மகளான ரம்யாகிருஷ்ணன் தன்னை விரும்பிய பிரபுவை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருவார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாசர் ஆத்திரத்தில் மகளை அடித்து விரட்டுவதோடு, பிரபுவை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். ஆசை மகளின் அத்தனை பொருட்களையும் தீயில் போட்டு எரித்து விடுகிறார். அப்படி வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாகிருஷ்ணனுக்கு கேத்ரின் தெரேசா, மேக்னா ஆகாஷ் என இரண்டு மகள்கள். பிரபு பிரபல வக்கீல்.


நாசருக்கு மீண்டும் மகளை பார்க்க வேண்டும் மகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், அப்பா நாசரை விட பல மடங்கு கோபக்காரியான ரம்யாகிருஷ்ணனை சமாதானப்படுத்தவே முடியவில்லை.
இந்த சூழலில், பேரன் சிம்புவிடம் எப்படியாவது அத்தையை(ரம்யாகிருஷ்ணனை) மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை நாசர் தருகிறார்.


அதற்காக சிம்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். இங்கே ரம்யாகிருஷ்ணன் வீட்டில் டிரைவராக வேலைக்கு சேருகிறார்.
ஹார்ட் அட்டாக்கில் இருந்து மாமா பிரபுவை காப்பாற்றுகிறார். அத்தையின் வாங்கி கடனுக்காக ஓட்டலை எழுதி வாங்கும் மொட்டை ராஜேந்திரனிடம் இருந்து ஓட்டலை மீட்டு மீண்டும் ரம்யாகிருஷ்ணனிடம் கொடுக்கிறார். ரவுடிகள் கடத்த திட்டமிட்ட அத்தை பெண் கேத்ரின் தெரேசாவை காப்பாற்றுகிறார். ஆனால், இரண்டாவது பெண் மேக்னா மட்டும் சிம்புவை வீட்டை விட்டு விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். அப்படியிருந்தும் வீட்டில் உள்ள அனைவரின் அன்பையும் சிம்பு பெற்று விடுகிறார்.


ஒரு கட்டத்தில் சிம்பு யார்… எதற்காக இந்த வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை ரம்யாகிருஷ்ணன் கண்டுபிடித்து விடுகிறார். அதன்பிறகு சிம்புவின் எண்ணம் நிறைவேறியதா? நாசருடன் ரம்யாகிருஷ்ணன் ஒன்று சேர்ந்தாரா? என்பதுதான் கிளைமாக்ஸ். இது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் கதை.
பிரபு, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, ரோபோஷங்கர், ராதாரவி, தளபதி தினேஷ், மகத், விடிவி கணேஷ், ராஜ்கபூர், மொட்டை ராஜேந்திரன் என காமெடி நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் இருக்கிறார்கள்.


இதில் ரம்யாகிருஷ்ணன் மேனேஜராக வருகிற ரோபோ ஷங்கருக்கும் சிம்புவுக்கும் நடக்கிற சின்ன சின்ன மோதல்கள் அனைத்துமே ரசிக்கும் ரகம். பல இடங்களில் பல்ப் வாங்கும் ரோபோ ஷங்கர் சிரிப்புக்கு உத்தரவாதம்.
அதோ போல சிம்புவின் பாதுகாப்புக்கு வரும் விடிவி கணேஷிடம் ‘யோவ் பேசாம நடிக்கலாம் போல’ என்று சிம்பு பேச… ‘பாஸ் அதுல ஷூட்டிங்குக்கு டைமுக்கு போகணும்’ என்று விடிவி கணேஷ் சொல்லும்போது சிம்புவின் சினிமா ஷூட்டிங் வில்லங்க விவரங்கள் தெரிந்த ரசிகர்கள் வெடிச்சிரிப்பு சிரிப்பார்கள்.


ஏன்னா, ஷூட்டிங்குக்கு சிம்பு நேரத்துக்கு வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டு எப்போதுமே எழுபும்.அதையும் தன் படத்திலேயே தானே பேசி நக்கல் அடித்திருக்கிறார் சிம்பு.
ஏற்கனவே, தெலுங்கில் வெளியான படத்தின் அத்தனை சாயல்களும் இதில் இருந்தாலும் சிம்புவின் நடிப்புக்கும், சுந்தர்.சி.யின் இயக்கத்திற்கும் படத்தை தியேட்டரில் போய் பார்க்கலாம்.
சுந்தர்.சி.படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதால் வழக்கமான கலகலப்பான காமெடி படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.
சிம்பு நடிப்பு, டான்ஸ், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பினாலும் உடம்பு கொஞ்சம்… இல்ல இல்ல…. ரொம்பவே உடம்பு போட்டிருக்கு அதை குறைத்துக் கொண்டால் இன்னும் தாக்குபிடிக்கலாம். வெயிட் போடுவதை தடுக்காமல் விட்டால் இளையதிலகம் பிரபுவின் தம்பி கேரக்டருக்குதான் அழைப்பு வரும்.
மிகப்பெரிய செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தைதயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறார். ஹிப் ஆப் தமிழாவின் இசையும், கோபி அமர்நாத்தின் கேமராவும் ரசிக்கும் ரகம்.

மொத்தத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் ரசிகன் கொடுக்கும் காசுக்கு குறை வைக்க மாட்டான்..!
– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *