வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

ஐரா – கோடங்கி விமர்சனம்

 

நயன்தாரா முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி என்ற இரு குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா.

அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர்.

மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டுகொள்கிறார் கலையரசன்.

யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார்.

எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்ன தொடர்பு..?? என்பதை க்ளைமாக்ஸ் காட்சிகளாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

யமுனா கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, வழக்கமாக நாம் அனைவரும் பார்த்த ரசித்த நயன்தாரா தான். ஆனால், பவானியாக வரும் நயன்தாரா நம் மனதில் நிற்பவர். ஒரு கருப்பியாக தனது வாழ்க்கை ஒரு ‘ராசியற்ற’, வாழ்க்கை என்பதை எண்ணி எண்ணி குறுகி நிற்கும் காட்சிகள் அப்ளாஷ்.

படம் முடிந்து வெளிவரும் போது நிச்சயம் பவானி அனைவரின் மனதிலும் நின்று பேசுவாள்.

இளம் வயது பவானியாக வரும் கேப்ரில்லா, அழகு. கதை நகர்வுக்கு உயிரோட்டம்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் கலையரசன். தனது நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ளார்.

சுந்தர் கே எஸ் மூர்த்தியின் இசையில் ‘மேகதூதம்’ பாடல் கேட்கும் ரகம். பின்னனி இசை மிரட்டல். திகில் படத்திற்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதையே கொடுத்திருக்கிறார்.

சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். பவானி வரும் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.

‘பவானி யமுனாவை எதற்காக கொல்ல நினைக்கிறார் என்பதற்கு கதையின் இறுதியில் வைத்திருக்கும் ஒரு ட்விஸ்ட் தமிழ் சினிமாவில் யாரும் யூகிக்க முடியாத ஒரு திருப்பம் தான்.. இந்த ட்விஸ்ட் பார்த்தும் தியேட்டரை விட்டு அலறி ஓடத்தான் தோன்றுகிறது..

 இதெல்லாம் ஒரு ’ட்விஸ்ட்’ன்னு வச்சிருக்கீங்களே  என ரசிகர்கள் முணுமுணுப்பது நிச்சயம்.

– ஐரா  பேயை பார்த்து பயம் வரவில்லை… 

             படத்தை பார்த்து ஈர்ப்பும் வரவில்லை.

ஒரே ஆறுதல் நயன்தாரா கருப்பு அழகியாக கவர்வதுதான். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் ஐரா ரசிகர்களோடு ஐக்கியமாகி இருப்பாள்..! 

 

கோடங்கி மதிப்பீடு: 2.5/5

347 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன