
பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.
பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்.
அவர் படங்களை இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று நினைத்தேன்.
சமீபத்தில் அவரை சந்திக்கும் போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்.

இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960-களில் சுனில் தத் இதேபாணியில் படத்தை இயக்கியிருந்தார்.
அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஹிட் அடித்தது. அந்தப் படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவதாக, தென்னிந்தியாவில் முதலாவதாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தது மட்டுமின்றி அவரே தயாரித்து கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டுமானால் வித்தியாசமாக இருக்க வேண்டும், எதார்த்தமான கதை கொண்டிருக்க வேண்டும். படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் ஒத்த செருப்பு படத்தில் அமைந்திருக்கிறது.
படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனது நண்பர் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்வு எப்படி வெற்றியடைந்து மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல் படமும் வெற்றியடைந்து ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று பார்த்திபனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
