
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்துவந்த நிலையில், 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.
கோடை வெயிலுக்கே நொந்து போயிருந்த மக்கள், தகிக்கும் ‘கத்திரி’ வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளாகினர்.
எப்போதும் வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
கத்திரி வெயிலுக்கு பயந்து பகலில் வீடுகளிலேயே மக்கள் பலர் முடங்கினர்.

வழக்கமாக கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை. குறிப்பாக சென்னையில் மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
தமிழகத்தை நோக்கி வந்த ‘பானி’ புயலும் திசைமாறி சென்றதால் காற்றில் இருந்த ஈரப்பதமும் போய் அனல் காற்று அதிகரித்தது.
தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து எடுத்தது.
இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் நாளையுடன் (புதன்கிழமை) விடைபெறுகிறது.
இதையடுத்து வெயிலின் கடுமையான வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

