
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.
‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது.
ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது
பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் இந்த வசூல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததே படம் தோல்வி அடைய காரணம் என்கிறார்கள்.

இந்த படத்தின் நாயகன் நரேந்திர மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்று 303 தொகுதிகளை தன் கட்சிக்கு பெற்றுத் தந்தார்.
அப்படி நாடே ஆதரித்து மெகா வெற்றியை சொந்தமாக்கிக் கொண்டவரின் திரைப்படம் ஏனோ பெருசாக எடுபடவில்லை. 3 நாளில் 11 கோடி வசூல் என்பது ஒரு சாதாரண தரம் கொண்ட சினிமாவாக நரேந்திர மோடி வாழ்க்கை படம் ஆகிப்போனதை குறிப்பிடுகிறதோ என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஓட்டு மெஷினில் மெகா ஹிட் அடித்த மோடியின் வாழ்க்கை பட டிக்கெட்டுகள் புக் ஆகாமல் போனதற்கு என்ன காரணம் என படக்குழு ஆராய்ந்து வருகிறதாம்.
