வியாழக்கிழமை, மே 16
Shadow

ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

 

ஜெய் ஜெய் டிரம்ப் மந்திரங்கள் ஒலிக்க டிரம்ப் சிலையை வழிபடும் தெலங்கானா விவசாயி..!

அமெரிக்காவில் நிர்வாண சிலையாக நின்ற டிரம்ப் தெலங்கானாவில் கடவுளாக சிலை வைத்து வழிபடுகிறார் ஒரு விவசாயி.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா 32 வயதான விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார்.

தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைக்கும் அளவுக்கு அவரது அபிமானம் சென்றுள்ளது.

டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார்.

சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் சொல்லி வழிபடுகிறார்.

டிரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி நம்மூர் அரசியல்வாதிகள் போல வாழ்த்து போஸ்டர்களை தனது வீட்டு சுவற்றில் புஸ்சா கிரு‌‌ஷ்ணா ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

டிரம்ப் சிலை அமைக்க கிரு‌‌ஷ்ணா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்தாராம்.

கடவுள் போல தனக்கும் தினமும் வழிபாடு நடக்கின்ற விஷயம் டிரம்ப்புக்கு தெரியுமா எனறால்… “உலகின் மிகச்சிறந்த வலிமைமிக்கவர் டிரம்ப். என்றாவது ஒரு நாள் அவரை சந்திப்பேன்” என்கிறார் கிருஷ்ணா.

இது இப்படி என்றால் கடந்த தேர்தலின் போது இதே டிரம்ப்பை நிர்வாணமாக சிலை வடிவத்தில் வைத்து அவமானப்படுத்தியது அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல உருவம் கொண்ட ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து (அந்தரங்க உறுப்புகள் இல்லாமல்) ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி வைத்தது.

இதில் நான்கு சிலைகளை டிரம்ப் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

உலகின் ஒட்டுமொத்த பார்வையிலும் அந்த நிர்வாண சிலை கவனம் பெற்றது. காரணம் வல்லரசு நாடுகளின் தலைமை எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபராக வரப்போகும் ஒருவரை நிர்வாணமாக சிலை வடிவத்தில் வைத்தது பெரும் பரபரப்பை உலகம் முழுதும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட அந்த சிலை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவர் டிரம்ப் சிலையை இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய் கொடுத்து சிலையை ஏலம் எடுத்துள்ளார்.

இந்த சிலையை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் வைக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

 

656 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன