செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

கடும் தண்ணீர் பஞ்சம் 28ல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா…

 

தமிழக சட்டப்பேரவை 28ல் கூடுகிறது. கடும் தண்ணீர் பஞ்சம், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் என சட்டசபை கூட்டத் தொடர் கடும் அமளியாக இருக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுடன்
சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.

இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சட்டசபை கூடியதும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை கூட்டம் எப்போது கூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடைபெற்றது.

அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்ததால் துறை வாரியாக நடத்தப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படவில்லை. எனவே மீண்டும் சட்டசபை கூடியதும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் கடும் சிக்கலை மக்கள் சந்தித்து வருகின்றனர். அரசு எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதால் சட்டசபை கூட்டத்தில் தண்ணீர் பிரச்சினைகளை பெரிய அளவில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

710 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன