வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் – இது சேலம் கலாட்டா

நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள்.

இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை.

இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது.

சரி விஷயத்திற்கு வருவோம்…

நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த போது பல முறைகேடுகள் நடந்தது என்று கேள்வி எழுப்பி அதன் மூலம் அப்போது நடந்த தேர்தலில் விஷால்- நாசர் கூட்டணியின் பாண்டவர் அணி பெறும் வெற்றி பெற்றது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் படி ராதாரவி-சரத்குமார் கூட்டணி செய்த முறைகேடுகள் பலவற்றை ஆதாரத்துடன் நிரூபித்துக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் குறிப்பாக காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் நில மோசடி வழக்கு ராதாரவிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் வாக்குறுதியிலும் பாண்டவர் அணி பரபரப்பாக செயல்பட்டு பணிகளை தொடங்கியது.

அப்போது எஸ்.வி.சேகர் ஒரு வழக்கை தொடர்ந்து கட்டிட பணிகளை நடத்த முடியாமல் தடை செய்தார்.

பின்னர் அந்த வழக்கையும் நீர்த்து போக செய்து மீண்டும் நடிகர் சங்க கட்டிட பணிகளை பாண்டவர் அணி பரபரப்பாக தொடங்கியது.

உலக தரத்தில் மிக நவீன டிசைனில் மிக பிரமாண்டமான கட்டிடமாக மேலெழும்ப தொடங்கிய நடிகர் சங்க கட்டிட பணிகள் இப்போது 60 சதவீத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணியின் பதவி காலம் முடிந்ததால் முறைப்படி சில மாதங்கள் நிர்வாக நீடிப்பு செய்தபின்னர் இப்போது தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடிகர் சங்கத்தில் பதவி காலம் முடிந்து நிர்வாக நீடிப்பு செய்த விஷயத்தில் விதிமீறகள் எதுவும் நடை பெறவில்லை என்பதை நன்கு விசாரித்து முறைப்படி பதிவாளரிடம் விளக்கம் பெற்ற பிறகே தேர்தல் தேதியை அறிவித்தார்.

இதையடுத்து மீண்டும் பாண்டவர் அணி சின்ன மாற்றங்களோடு களத்தில் இறங்கியது.

கடந்த முறை பாண்டவர் அணியை ஆதரித்த ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி உருவானது. இதில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

நாசர்-விஷால் கூட்டணியின் பாண்டவர் அணியின் மீது உருப்படியான குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் தேர்தல் நடந்தால் பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெறும் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

இதையடுத்து எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது சமரசம் செய்து பதவியை பிடித்து கொள்ள திறைமறைவு வேலைகள் முழு வீச்சில் நடந்தது.

அதோடு, ஆளும் கட்சியின் பல தவறான முடிவுகளை விஷால் கடுமையாக விமர்சித்து வந்ததால் அவர் மீது ஆளும் கட்சி கடும் கோபத்தில் இருந்தது.

இந்த நிலையில் ஆளும் கட்சியோடு இணக்கமாக இருக்கும் ஐசரி கணேஷ் வசம் ஒரு திட்டம் ஆளும் கட்சியால் ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதன்படி, சுமார் 5 கோடிவரை இந்த தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டது என்றும், ஒரு ஓட்டுக்கு 15 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு ஆளும் கட்சியில் இருந்து ஒரு அமைச்சர் தலைமையில் ஒரு அணி பரபரபாக பணியாற்றி வருகிறதாம்.

ஏற்கனவே ஐசரி கணேஷ் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் பகிரங்கமாக விதிகளை மீறி சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவு திரட்டும் விவரங்கள் பல ஆதாரத்துடன் சிக்கியுள்ளது.

இது ஒரு பக்கம் நடந்து வரும் போது பாண்டவர் அணி ஊர் ஊராகச் சென்று நாடக நடிகர்களை சந்தித்து மீண்டும் ஆதரவு கேட்டதில் பெரும்பாலான நாடக நடிகர்கள் பாண்டவர் அணியை ஆதரிப்பது வெட்ட வெளிச்சமானது.

அதனால் அதிர்ச்சி அடைந்த சுவாமி சங்கரதாஸ் அணி வேறு வழியின்றி தங்களது அதிகார பலத்தையும், அரசு பலத்தையும் நாட…

அப்புறம் என்ன… சினிமாவில் வரும் திடுக் திருப்பங்களை மிஞ்சும் விதமாக பல அதிரடிகள் அரங்கேற்றம் தொடங்கியது.

அதில் முதல் படி…

பல நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெறும் இடம் இதுதான் என அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு கேட்ட மனுவுக்கு பல நாட்கள் கழித்து பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என தமிழக போலீஸ் மறுத்த விவகாரம். பஞ்சாயத்து சிக்கல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தலையே ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த காவல்துறைக்கு வெறும் 3 ஆயிரம் பேர் வாக்களிக்கும் ஒரு சங்க தேர்தலை நடத்த பாதுகாப்பு கொடுக்க சிரமம் என்று சொன்ன காரணம் சாமானிய பொது மக்களையும் யோசிக்க வைத்தது. ஏதோ ஒரு அதிகார அழுத்தம் காரணமாக இந்த கேலிக்கூத்தான முடிவை காவல்துறை எடுத்ததோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.

அடுத்ததாக…
முறையாக அறிவிக்கப்பட்ட தேர்தலை சங்க பதிவாளர் தடை செய்யும் உத்தரவு. இதற்கு காரணமாக தேதியே குறிப்பிடாத புகார் மனுக்களை ஆவணமாக தாககல் செய்தது.

இதை எல்லாம் ஒரு பக்கம் சத்தமில்லாமல் செய்து வரும் அதே நேரத்தில் வாக்களிக்கும் நடிகர்கள், நாடக நடிகர்களை தேடி வீடு வீடாக ஆளும் கட்சியினர் சென்று சந்தித்து சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வாக்கு சேகரிக்கும் பணியை விடாமல் செய்து வருகின்றனர்.


உண்மை இப்படி இருக்க… ஆளும் கட்சியோ , அமைச்சர்களோ அரசோ எந்த வகையிலும் நடிகர் சங்க தேர்தலில் தலையிடவில்லை என்று கவர்னரை சந்தித்து திரும்பிய பாக்யராஜ், ஐசரி கணேஷ் கூட்டணி அறிவித்ததுதான் உச்சபட்ச காமெடியாக பார்க்கப்பட்டது.

நடிகர் சங்கத்தில் ஆளும் கட்சி திரைமறைவில் வேலை செய்து வரும் விவகாரம் இப்போது ஆதாரத்துடன் சிக்கி உள்ளதாம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர்களின் வீடுகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ. சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன் இருவரும் சென்று சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவாக பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது ஆதாரத்துடன் சிக்கி உள்ளதாம்.

அதிமுக எம்.எல்.ஏ.வும் , முன்னாள் மேயரும் பணப்பட்டுவாடா செய்ய நாடக நடிகர்கள் வீடுகளுக்கு சென்ற விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.,வும் பாண்டவர் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாஸ் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சி இத்தனை வேகமாக பாண்டவர் அணியை வீழ்த்த என்ன காரணம்… இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன… பாண்டவர் அணியை வீழ்த்தி பதவியை பிடிக்க பாக்யராஜ் எப்படி பகடையாக மாறினார் என்பதை அடுத்த கோடங்கி ஸ்பெஷலில் எதிர் பாருங்கள்.

– கோடங்கி

1,103 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன