Saturday, July 4
Shadow

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

1,186 Views

 

 

தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன.


இந்த மாற்றத்திற்கான பட்டியலில் தமிழகத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியான பாஜக இணைய உள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவி காலம் சில மாதங்களில் முடிய இருப்பதால் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சி உள்ளேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்க பட்டு வருகிறது.

கடந்த ஐந்தரை வருடங்களாக தமிழக பாஜகவின் தலைவராக இருந்து வருபவர் தமிழிசை சௌந்தரராஜன். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மற்ற மாநிலங்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த மத்திய பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுபடுத்தும் முதல் நடவடிக்கையை மாநில தலைவர் பதவியில் இருந்து துவங்க உள்ளது.

 

இது குறித்து தமிழக பாஜக நிலவரங்களை நன்கு அறிந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது,
மற்ற மாநிலங்களை விட தமிழக அரசியல் நிலவரம் என்பது வித்தியாசமானது. தமிழக பாஜக தலைவர் பதவி என்பது ஒரு முள்கிரீடம் போன்றது என்பதை மத்திய பாஜக வுக்கும் தெளிவா புரிஞ்சு இருக்கு.

மக்களவை தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது. கட்சியை மீட்டு கொண்டு வர்றதோட, தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்சிக்கு புது ரத்தம் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் ஒரு நல்ல தலைமையை தமிழகத்துக்கு அமைத்து கொடுக்க வேண்டுமென மத்திய பாஜக விரும்புகிறது.

புதிதாக தேர்ந்து எடுக்கபடும் மாநில தலைவருக்கு பெரிய பொறுப்புகள் இருக்குறதுனால அதற்கு தகுதியான நபரா அவர் இருக்கணும்னு தலைமை விரும்புது .தமிழக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் மக்களை கவரும் முகமா இல்லை. அதுமட்டும் இல்லாம கட்சிக்குள்ளயே அனைவரையும் அனுசரித்து செல்பவராகவும், தமிழகத்தில் பாஜகாவுக்கு என்று ஒரு முகம் வேண்டுமென்று சிலரை மத்திய தலைமையே தயார் செய்தும் வைத்து இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கு.

தற்போது வரைக்கும் மாநில தலைவருக்கான இந்த ரேசில் சி.பி.ராதாகிருஷ்ணன்,வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் இந்த ஐந்து பேரும் பட்டியல்ல இருக்காங்க.

இவங்கள்ல யாருக்கு வாய்ப்பு இருக்குன்னு பார்த்தால், சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே ஒரு முறை தலைவரா இருந்து இருக்கார். இது மட்டும் இல்லாம பல வருடங்களா கட்சியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரா அவர் மாறல. மக்களவை தேர்தல்ல தனக்கு கட்டாயமா சீட் வேணும்ன்னு சண்டை போட்டு வாங்குனவரால ஜெயிக்க முடியல. தேர்தல் காலங்களில் மட்டுமே முகம் காட்டுபவர் என்ற குற்றசாட்டும் இருக்குது. அதனால சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்புகள் கம்மிதான்.

அடுத்ததா வானதி ஸ்ரீனிவாசனை பொறுத்த வரைக்கும் இந்த தேர்தலில் பேட்டியிட கூட அவரால் சீட் வாங்க முடியாத நிலையில் தான் இருக்காரு. அது மட்டுமில்லாம ஏற்கனவே பெண் ஒருத்தர் தலைவரா இருந்ததுனால மீண்டும் பெண் தலைவருக்கு வாய்ப்பு இல்லை

கே.டி.ராகவன் தொலைகாட்சி மூலமா ஓரளவு தெரிந்த முகமா இருந்தாலும், கட்சி தொண்டர்களோட அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதவிட அவருக்கு பெரிய மைனஸ் ஜாதி. ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு உயர்சாதி பிம்பம் இருப்பதால் அந்த ஜாதியை சார்ந்தவரை தலைவராக்கினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்.

அடுத்ததாக ஏ.பி.முருகானந்தம். கட்சியின் புதுமுகம். இளையவர். மோடி, அமித்ஷா நேரடி பார்வையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணியாற்றியவர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களின் போரட்ட குழு தலைவராக செயல்பட்டவர். முக்கியமா மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் போரட்டங்களை வெற்றிகரமா நடத்தி காட்டி தலைமையின் பாராட்டை பெற்றவர். தமிழகத்தில் கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்பு வழங்கனும்னு சொல்லி இங்குள்ள சில மூத்த தலைவர்களிடம் கொஞ்சம் கடினமாகவே கோரிக்கை வைத்தவர். அதனால் சிலர் இவருக்கு முட்டுகட்டை போடலாம். ஆனா இளைஞர், புதியவர் ஒருவரை தலைவராக கொண்டுவர வேண்டும் என்று மத்திய தலைமை முடிவு எடுத்தால் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராவதற்கு ஏ.பி.முருகானந்ததிற்கு வாய்ப்புகள் அதிகம்

இந்த ரேசில் கடைசியில் இருப்பவர் ஸ்ரீனிவாசன். கட்சி விதியின்படி தலைவர் பதவிக்கு போட்டியிடணும்னா கட்சி உறுப்பினர் ஆகி ஆறு’வருஷம் முடிஞ்சு இருக்கனும். மதுரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கட்சிக்குள்ள வந்ததே 2016ல தான்.

புதிய மாநில தலைவர் தேர்வுக்கு அப்புறம் கட்சிக்குள் பல்வேறு அதிரடி மற்றங்கள் இருக்கும். இனிமேல் தமிழகத்தில் பாஜக புது ரூட்ல பயணிக்கும் என்று சொல்லி முடித்தார்.

உலகிலேயே மிக கடினமான பதவி என்றால் அது தமிழக பாஜகவின் தலைவர் பதவி தான். நடை,உடை,பேச்சு, என அவர்களின் அத்தனை நடவடிக்கையும் கேலிக்குள்ளாக்கபடும் தமிழகத்தில், அத்தனையும் மீறி வெறுப்புகளை புறம் தள்ளி மக்கள் மனங்களில் தாமரையை மலர செய்வது என்பது தான் தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கு முன் உள்ள சவால்கள். கொஞ்சம் இல்ல ரொம்ப கஷ்டமான சவால்தான்… சவால்னா கஷ்டமா இருந்தா போராட தோணும்… பார்க்கலாம். சட்டசபை தேர்தலில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமான்னு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *