புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

155 Views

 

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்கார குரல் எழுந்தது. சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்.

ஸ்டெர்லைட் மற்றும் தேசத்துரோக வழக்குகளின் பணி சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது எனது மனதை காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யாவின் விளக்கத்தை படித்தபோது, அவரது மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். கலை உலகில் வெள்ளித்திரையில் ஒளிவிடும் நட்சத்திரம், அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாக பணியின் சாயல் சூர்யாவின் ‘அகரம் பவுண்டேசனி’ல் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்

தியாக சீலர் காமராஜர் தமிழ்நாட்டில் கல்வி கண்களை திறந்தார். புதிய கல்விக்கொள்கை ஏழை–எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது. நடிகர் சூர்யாவின் தந்தை குணச்சித்திர நடிகரான சிவக்குமார் கலைத்துறையில் ஒழுக்கமானவர். நிகரற்ற இலக்கியச் சொற்பொழிவாளர். அவரது புதல்வர்கள் சூர்யாவும், கார்த்தியும் தந்தையை போலவே தனி மனித ஒழுக்கம் கொண்டவர்கள். அகந்தையும், ஆணவமும் அறவே இல்லாதவர்கள்.

நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. அகரம் நிறுவனம் மூலம் செய்த பணிகளை அவர் விளம்பரப்படுத்திக்கொண்டது இல்லை. பிறர் அறியமாட்டார்கள். அந்த உயர்ந்த சேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்துக்கு தோள் கொடுத்து உயர்த்துவார்கள் என பாராட்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =