இனி இஷ்டம் போல யாரும் சினிமா விருது விழா நடத்த முடியாது… தயாரிப்பாளர் சங்க ஆலோசனை கமிட்டி திடீர் கட்டுப்பாடு..!

237 Views

 

தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையிலான ஆலோசனை கமிட்டி நிர்வகித்து வருகிறது.

இந்த ஆலோசனை கமிட்டி தமிழ் சினிமாவில் பல அதிரடிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
சமீபத்தில் சேலம் ஏரியா ரிலீஸ் விவகாரத்தில் இதுவரை இருந்த சிண்டிகேட் முறையை மாற்றி எல்லா படங்களும் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆக வழி செய்யப்பட்டது.

இப்போது அடுத்த அதிரடியான முடிவாக சினிமா விருது விழாக்கள் நடத்துவதில் சில வழிமுறைகளை கமிட்டி உருவாக்கி உள்ளது.

அதன் படி விருது விழா நடத்தும் எந்த நிறுவனமும் இனி இஷ்டம் போல எந்த விழாவையும் நடத்த முடியாது. அப்படியே நடத்தினாலும் விருதுக்கு தேர்வாகும் படங்களின் தயாரிப்பாளருக்கும் உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். அதோடு எந்தெந்த படத்தில் இருந்து விருதுக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்கிறார்களோ அந்தந்த படங்களின் தயாரிப்பாளரிடம் இருந்து NOC பெற்ற பிறகே விருது விழாக்களில் அந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை, பாடல்களை பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் பணம் முதலீடு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தனி மரியாதை, உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கமிட்டி உறுப்பினர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஒரு ஆடியோ வெளியிட திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஒரு பக்கம் அதற்கு ஆதரவும், மறுபக்கம் முணுமுணுப்புகளும் கிளம்பத்தான் செய்தது.

அதே நேரம் இந்த விவகாரத்தை கிளப்புவதன் மூலமாக தயாரிப்பாளர் என்பவர் தான் ஒரு படைப்பு உருவாக முழு காரணம் என்பதும், இயக்குனர் திறமை பெற்றவராக இருந்தாலும் தயாரிப்பாளர் முதலீடு இல்லாமல் எந்த படைப்பும் உருவாக்கப்படுவதில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் தான் இந்த அதிரடிகளை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக குழு கையில் எடுத்து உள்ளது.

இதையடுத்து சினிமா தயாரிப்பில் பெரும் பகுதியை எடுத்து கொள்ளும் ஹீரோ, ஹீரோயின், தொழில்நுட்ப கலைஞர்கள் ஊதிய விவகாரத்தை கையில் எடுப்பார்கள் என தெரிகிறது.

கேரளா உள்ளிட்ட சில மொழிகளில் உள்ளது போல ஊதிய விவகாரத்தில் சில தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது படத்துக்கு படம் விண்ணை முட்டும் ஹீரோக்களின் சம்பளம் மட்டுப்படும்.

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 9 =