வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..?

 

 

*தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?…தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை!*

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களில் செலவு கணக்கை தாக்கல் செய்வது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது, தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

539 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன