வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

 

 

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

எழுத்து, இயக்கம் : ஹலிதாஷமீம் ,
இசை :பிரதீப்குமார் ,
ஒளிப்பதிவு :அபிநந்தன் ராமானுஜம் ,மனோஜ் பரமஹம்சா ,விஜய் கார்த்திக்

நடிப்பு: கண்ணன்,யாமினி யக்ஞமூர்த்தி சமுத்திரக்கனி,சுனைனா ,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் ,லீலா சாம்சன்,சாரா அர்ஜூன் ,கிராவ் மகா ஸ்ரீராம் ,ராகுல்,

ஒரு மாலை நேரம் சில்லென சாரலுடன் குளிர் காற்று லேசாய் வீசும் போது பால்கனியில் நின்று சுக்கு மல்லி காபியில் கருப்பட்டி போட்டு சுடச்சுட ஒரு சிப் அடித்தால் நுனி நாக்கு தொடங்கி அடித் தொண்டைவரை இனிமையான சுவையுடன் ஒரு இன்பம் இருக்குமே அப்படி இருக்கிறது சூர்யா தயாரித்த சில்லுக் கருப்பட்டி.

படம் தொடங்கும் போதே குப்பை அழுக்கு பாவப்பட்ட மனிதர்கள் ஏழ்மை இருந்தாலும் அதில் நேர்மை இருக்கும் என்பது போல ஒரு கதை…

குப்பையில் பொருட்களை சேகரிக்கும் பையன் கையில் ஒரு நாள் பிங்க் கலர் குப்பை கவர் கிடைக்கிறது அதில் ஒரு பெண்ணின் அழகிய படம் சில பொருட்கள் கிடைக்கிறது. மறு நாளும் அதே போல பிங்க் குப்பை கவர்… தினமும் பிங்க் கலர் குப்பை கவருக்கு காத்திருக்கிறான். ஒரு நாள் அந்த குப்பை கவரில் வைர மோதிரம் கிடைக்கிறது. அதை தொலைத்த பெண் தேடுகிறார். எடுத்த குப்பை சேகரிக்கும் பையன் மோதிரத்தை கொடுத்தானா இல்லையா இப்படி ஒரு கதை…

அது முடிந்ததும் ஐடியில் வேலை பார்க்கும் வாலிபனுக்கு மீம்ஸ் போடுவது பொழுது போக்கு… அவர் அலுவலகம் செல்லும் வாடகை காரில் தினமும் பயணிக்கும் ஒரு இளம் பெண்… அந்த மீம்ஸ் வாலிபனுக்கு திடீரென கேன்சர் பாதிப்பு தெரிய வருகிறது… சோகமான வாலிபனை கூட காரில் பயணப்படும் இளம் பெண் தேற்றுகிறார்… இருவருக்கும் காதல் மலர்ந்ததா… இப்படி ஒரு கதை..

திருமணமே செய்து கொள்ளாமல் வயதாகிவிட்ட ஒரு பேரிளம் பெண்… மனைவியை இழந்த ஒரு முதிர் கண்ணன் இருவரும் மருத்துவ பரிசோதனையின் போது சந்திக்கிறார்கள்… அவர்களுக்குள் ஏற்படும் நட்பு கடைசியில் என்னவாக முடிகிறது… இப்படி ஒரு கதை…


3 குழந்தைகளுடன் சுனைனா… கணவனாக சமுத்திரக்கனி. வேலை வேலை என ஓடும் கனி… கண்வன் கனி புரிந்து கொள்ள மாட்டாரா என அன்புக்காக ஏங்கும் சுனைனா… மனைவியின் ஆசை புரியாமல் மிஷின் வாழ்க்கை வாழும் கனி. செக்ஸ் கூட மனைவியின் விருப்பம் எல்லாம் இல்லாமல் தன ஆசைக்கு மட்டும் தேடும் கனி. இப்படி இருக்கும் கணவன் மனைவி உறவு என்ன ஆகிறது மனைவியை கனி புரிந்து கொண்டாரா இப்படி ஒரு கதை…

என நான்கு விதமான கதைக்களத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் யதார்த்தமாக காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

ஆண்டு இறுதியில் ஒரு கவித்துவமான சினிமா ரசிகர்களின் பல்ஸ் எகிறும் படம் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சூர்யா.

சில்லுக்கருப்பட்டியில் எந்த கதையிலும் காட்சிகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் காட்சிக்கு தேவையான நடிகர்களை தேர்வு செய்ததும் ஒரு பலம்.

வழக்கமாக அதிகம் அட்வைஸ் செய்யும் சமுத்திரகனியையும் அதிகம் பேச விடாமல் நடிக்க மட்டும் வைத்து சபாஷ் வாங்குகிறார் இயக்குனர்.

சுனைனாவுக்கு மீண்டும் ஒரு தனி ரசிகர் கூட்டம் வரலாம். அவர் கதாபாத்திரம் அதை ஏற்ப்படுத்துகிறது.

விருதுகள் வரிசை கட்டும். படம் பார்த்தவர்கள் அதைப பற்றி கண்டிப்பாக அடுத்தவரிடம் அதிகம் பேசுவார்கள் இதுவும் படத்துக்கு பலம்.

ஒவ்வொரு கதையின் ஒளிப்பதிவும் அத்தனை அழகு.

பிரதீப் இசை, பின்னணி இசையில் ரசிகர்களை கவரும் தனி ரசனை…

மொத்தத்தில் சில்லுக்கருப்பட்டி 2019 கடைசியில் வெளியாகி விருதுகளை தன் வசப்படுத்தப் போகும் ருசியான சீனிமிட்டாய்..!

– கோடங்கி

1,308 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன