
இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!
ரஜினியை வைத்து முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.
சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்த போது ”‘தர்பார்’ ரஜினி சார் ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் பார்க்கலாம்” என்றார்.
அவரிடம் ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தமிழ் மார்க்கெட்டை மட்டும் கவனத்தில் வைக்காமல் இந்தி மற்றும் தெலுங்கு மார்க்கெட்டையும் குறி வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம்.

அதன்படி, இந்தி ரசிகர்களுக்கு டிரைலர் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை மனதில் வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதனால், தான் இந்தியில் டிரைலர் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.
மேலும், தமிழில் ரஜினிகாந்த் படம் வெளியாவதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஆனால், பாலிவுட்டில் தர்பார் வெளியாகும் போது, இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களது படங்களை தாண்டி ரஜினி சார் படம் வெளியாவதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தி ரசிகர்களுக்கு பிடித்தவாறு டிரைலரை ரெடி செய்தோம்.” என்றார் முருகதாஸ்.
