வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

 

500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

கடன் பிரச்சனை தொடர்பான கைது செய்யப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தினரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டதற்காக ரூ.500 கோடி இழப்பீடு வழங்க கேட்டு, பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக,  சென்னை சவுகார்பேட்டை, தங்கச்சாலை தெருவைச்  சேர்ந்த ககன் போத்ரா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை முகுந்த் சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர், தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். அந்த வகையில், சென்னை தி.நகரைைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமார், கணபதி உள்ளிட்ட 4 பேர், எனக்கும் எனது தந்தைக்கும் எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். கொடுத்த பணத்திற்கு அவர்களின் ஓட்டலை மிரட்டி எழுதி வாங்கியதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில்,  காவல்துறையினர் எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், விதிகளுக்கு புறம்பாக என்னையும், எனது அப்பா முகுன்சந்த் போத்ரா, எனது சகோதரர் சந்தீப் போத்ராவை கைது செய்தனர்.


இதையடுத்து, பல சிவில் புகார்களை பெற்று என்னையும் எனது தந்தையையும் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, எனக்கும், எனது தந்தைக்கும் எதிராக புகார் அளித்தவருக்கு எதிராக சிவில் வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எனக்கும் எனது தந்தைக்கும் எதிரான புகாரில் கைது செய்து,  பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்னர், சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன் சட்டத்திற்கு எதிராகவும், தனக்கு இருந்த அதிகார பலத்தில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் எனது நற்பெயருக்கும், தொழிக்கும் பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததன் மூலமாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் எனக்கு திருமணத் தடை ஏற்பட்டுள்ளது.

 

எனவே சட்டத்திற்கு எதிராக, அதிகார பலத்தில் என்னையும், எனது தந்தையையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்ட சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே.  விஸ்வநாதன் மற்றும் தமிழக அரசானது, ரூ.500 கோடியை இழப்பீடாக  வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் போத்ரா மகன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் இம்மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, விசாரணையை, பிப்ரவரி 5- ம் தேதிக்கு தள்ளி வைத்தார்

1,271 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன