திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

 

 

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரானா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரானா வைரஸ். இந்த புதிய கொரானா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம்.

தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரானா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது..

சரி, கொரானா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? இது எவ்வளவு ஆபத்தானது? இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? மற்றும் இந்த நோய் குறித்து வெளியாகி வரும் செய்திகளில் எது உண்மை எது பொய்? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் இனி பார்க்கலாம்.

கொரானாவைரஸ் என்றால் என்ன?

ஒரு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது ஒரு கிரீடம் போல அல்லது சூரியனுடைய கொரானா பகுதிபோல தோன்றுவதால் இந்த வகை வைரஸ்களுக்கு கொரானா வைரஸ் எனும் பெயர் சூட்டப்பட்டது.

அடிப்படையில், காற்று மூலமாக பரவும் தன்மைகொண்ட கொரானா வைரஸ்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகளை தாக்கும்போது அவற்றின் மூச்சுக்குழாயின் மேல் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் சென்றுவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரானா வைரஸ்கள் பெரும்பாலும் சாதாரண சளி போன்ற உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரானா வைரஸ்கள் மனிதர்களின் உடலில் மிகவும் மோசமான மூச்சுத்திணறல் மற்றும் இதர பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொரானா வைரஸ்களை தடுக்கும், தடுப்பூசி அல்லது கொரானா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த கொரானா வைரஸ் எங்கிருந்து தோன்றுகிறது, எப்படி பரவுகிறது மற்றும் எப்படி பல்கிப் பெருகுகிறது உள்ளிட்ட தகவல்களைக் கண்டறிந்தால் இதனை தடுக்கவும், இந்த நோயை குணப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரானா வைரஸ் தொற்று நோயானது, விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் சூனாடிக் வைரஸ் நோய் (zoonotic viral diseases) வகையைச் சேர்ந்தது. மேலும் மனிதர்களைத் தாக்கி அவர்களின் உடலில் அதிகமாக பெருக அவசியமான பல மரபணு மாற்றங்களை இந்த வைரஸ் விலங்குகளின் உடலில் இருக்கும்போதே பெற்றுவிடுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன