வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவு!

 

 

ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவு!

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுவிட்டது. மேலும் சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால், அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. மேலும், இவர் ஒரு வருட காலமாக நீடிப்பார் எனவும் அரசாணை பிறப்பித்தது

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு அதிகாரி பதவிகாலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒருவருடத்திற்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வாதிட்டார். தற்போது, தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூன் 30-ந்தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதனை அடுத்து விஷால் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

312 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன