
டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.
வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார்.
இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
