வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

 

 

கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது.
அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை

தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலைமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு
அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி, திரையரங்களுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.3.2020 வரை மூடவும்,
60 கோடி நிதி
கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சர் மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு,ரூ.30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு,ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி,மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க ஆணையிட்டார்.
தனி  அலுவலர்கள்
மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன