வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

 

கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிதி – முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நேற்று தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்து, 3,280 கோடி ரூபாய் மதிப்பிலான பின்வரும் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க நான் ஆணையிடுகிறேன்

அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த 1,000 ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரே‌ஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணையும் வழங்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

383 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன