வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

 

 

கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியது:

மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி எஸ்.டி.ஆர்.எப்.புக்கு கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாக நிதி கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்கள். சீனாவில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிடம் போதுமான நிதி இருக்கிறது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தினம் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி தென்படாமலேயே அவர்கள் உடலில், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் பரிசோதனை செய்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை இவை. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தடை உத்தரவை கடுமையாக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேட்கிறீர்கள். அரசாங்கம், மக்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது, அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அதே நேரத்தில், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தி, துன்புறுத்தி இந்த தடை உத்தரவை அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். சட்டத்தை நாம் போடலாம், ஆனால் அதை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.

டெல்லி மாநாட்டிற்கு யார்-யாரெல்லாம் சென்றார்கள் என்று எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் எல்லாம் பரிசோதனை செய்யப்பட்டு, யார்-யாருக்கு பாசிட்டிவ் இருக்கிறதோ, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் யாராவது விடுபட்டிருந்தால், தாங்களாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கிறோம்.

யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால் நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஏனென்றால், ஒவ்வொருவருடைய உயிரும் மிக முக்கியம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

358 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன