
திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் – ஸ்டாலின் அதிரடி
திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பான விஷயத்தில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதற்கிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.
மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந் நிலையில், தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை டிஸ்மிஸ் செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ராஜ்யசபை சீட்டு தனக்கு கிடைக்கும் என கே.பி.ராமலிங்கம் எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு கே.பி.ராமலிங்கம் முன்னாள் அமைச்சர் அழகிரியின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.
