
கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு
உலகம் முழுதும் நடிகரை பார்க்க வேண்டும், அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது.
அதிலும் இப்படி போட்டோ எடுத்துக் கொள்ளவும், ஷூட்டிங் பார்க்கவும் பலர் பணம் கொடுப்பது தனிக்கதை.
அதில் பிரபலமான நடிகரின் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் எவ்வளவு பணம் கொடுக்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானாவை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உலகம் முழுதும் நிவாரண நிதி வசூல் நடை பெறுகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் அவர்கள் வசதிக்கு ஏற்ப நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
இந்த கொரானாவால் ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் பலியாகி உள்ளனர்.
பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உதவ பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோவும் நிதி திரட்ட நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும், ராபர்ட் டி நிரோவும் இணைந்து நடிக்க இருக்கிறோம். கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தர இருக்கிறோம். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்கலாம். படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு டிகாப்ரியோ கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.
இவரைப் போலவே நம்மூர் நடிகர்களும் அறிவித்து கொரானா நிதி திரட்டினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோரின் பசியை போக்க முடியும்.
