
பெப்சி மூலம் 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் – நிர்வாகி விளக்கம்
கொரானா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள திரைத்துறை ஊழியர்களுக்கு உதவி செய்ய திரையுலக பிரபலங்கள் பலரும் பெப்சிக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் கொடுத்து வருகிறார்கள்.
அதில் இருந்து பெப்சியில் அங்கம் வகிக்கும் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் அரிசி முட்டைகள் மற்றும் நிவாரண நிதி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
பெப்சியில் இருந்து நீக்கப்பட்ட டெக்னீசியன் அமைப்புக்கு நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என்றும் , பெப்சி நிர்வாகிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் நீக்கப்பட்ட டெக்னீசியன் யூனியன் பொதுச் செயலாளர் தனபால் குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக பெப்சி அமைப்பின் பொருளாளர் சுவாமிநாதன் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக அரிசி மூட்டைகள் வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரிய லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை
அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 200 முட்டைகள் மட்டுமே கொண்டு வந்து பிரித்து கொடுத்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக டெக்னீசியன் யூனியன் உறுப்பினர்களும் எங்களுடைய அங்கம்தான். இந்த சூழலில் நாங்க யாரையும் விட்டு விட மாட்டோம். ஏற்கனவே 3 முறை 200 மூட்டைகள் என 600 முட்டை அரிசி கொடுத்திருக்கிறோம். இன்று கூட 170 மூட்டை என அவர்களுக்கு மட்டும் 770 முட்டைகள் கொடுத்திருக்கிறோம்.
மீதி உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் விரைவில் கொடுத்து விடுவோம்.
மன்னிப்பு கடிதம் கேட்கிற விவகாரங்கள் எல்லாம் அவர்கள் சங்கத்தின் உள் விவகாரம்.
என்னைப் பொறுத்தவரை அரிசி வினியோகம் அனைத்தையும் நானே நேரில் கவனிக்கிறேன். தினமும் காலை 6 மணிக்கு பெப்சி அலுவலகம் வந்து விடுகிறேன். காரணம் அரிசி ஏற்றி வரும் வாகனங்கள் வரும் வழியில் ஊரடங்கு சோதனைகளை தாண்டி வர வேண்டி உள்ளது. சில நேரங்களில் வண்டி மாட்டிக் கொள்ளும் போது அதை பேசி எடுக்க வேண்டி உள்ளது.
இது போன்ற சூழலில் எந்த தொழிலாளிகளும் சிரமப்படக்கூடாது என்பதற்காக நான் ஒரு சேவையாகதான் செய்கிறேன்.
இதுவரை 19 ஆயிரம் மூட்டை அரிசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் அரிசி ஆலைகளில் ஊழியர் தட்டுப்பாடு காரணமாக அரிசி மூட்டைகள் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
பெப்சி அமைப்பில் இல்லாத ஜிம் பாய்ஸ், ரிச் கேள்ஸ், மூடப்பட்ட லேப் முன்னாள் ஊழியர்கள் என பலருக்கும் உதவி செய்து இருக்கிறோம் என்றார் சுவாமிநாதன்.
