
இந்தியாவில் மறையும் விளையாட்டாக மாறிய கிரிக்கெட் !
உலகளாவிய தொற்று நோய் கொரானா இந்தியாவுக்குள் நுழைந்த நேரத்தில் மத்திய அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது.
அதன் ஒரு பகுதி மக்கள் கூடும் எந்த நிகழ்ச்சியையும் அனுமதிப்பதில்லை என்பது.
நாடு முழுதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில்
இந்திய கிரிக்கெட் வாரியம் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசனை ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
காரணம் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் என நம்பப்பட்டது.
ஆனால் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2020 சீசனை மறு அறிவிப்பு வரும் வரை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
அதே நேரம் கொரானா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இருந்த போதும் வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது கணிக்க முடியவில்லை.
இதற்கிடையே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், மனித உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி மேலும் கூறுகையில் ‘‘ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் சமூக யதார்த்தத்தில் வேறுபாடு உண்டு. விரைவில் இந்தியாவில் கிரிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. ஏராளமான விஷயங்கள் உள்ளன. மிகவும் முக்கியமானது, மனித உயிர்க்கு ஆபத்தான நிலை உள்ளபோது, விளையாட்டு பற்றி நான் யோசிக்கவில்லை’’ என்றார்.
கங்குலி கூறியதிலும் மிகப்பெரிய உண்மை இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரளுவார்கள். சர்வதேச கிரிக்கெட் அதிலும் ,20 – 20 என்றால் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். அதேபோன்ற இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க முடியாது.
ஆக… இப்போதைக்கு கிரிக்கெட் விளையாட்டை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
