
ரேஷன் கார்டுக்கு 2ம் கட்டமாக தலா ரூ.ஆயிரம் வழங்க முதல்வர் ஆலோசனை – அமைச்சர் தகவல்!
அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
தமிழகத்தில் கொரானா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மாத தொடக்கத்தில் தலா ரூ. 1000 நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதுவரை 97.5 சதவீதம் மக்களுக்கு இந்த நிவாரண உதவித் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
2-வது கட்டமாக மேலும் தலா ரூ. 1000 நிதியாகவும், நிவாரண பொருட்களை இலவசமாகவும் அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக வழங்க முதல்-அமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இது தவிர 500 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டமும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்கிறார் அமைச்சர் கருப்பண்ணன்.
