வியாழக்கிழமை, மே 28
Shadow

டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

 

டிஜிட்டல் ரிலீஸ் ஆதரவு நிலைக்கு சங்க தேர்தல்தான் காரணம் – தயாரிப்பாளர் திருமலை ஆதங்கம்

கொரானா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்கு துறை அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே தெரியாமல் முடங்கிப் போய் உள்ளது.

இந்த சூழலில் ஊரடங்கு, வைரஸ் பரவல், சமூக இடைவெளி என பல்வேறு காரணத்தால் மூடிக்கிடக்கும் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது.

இதுபோன்ற சூழலில் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் டிவி, செல்போனில் மூழ்கி உள்ளனர்.

அதனால் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் வாங்கி உள்ளது.

தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அடுத்து வரும் படங்களை திரையிட மாட்டோம் என சூர்யாவுக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் குரல் எழுப்பினர்.

அதே நேரம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிற ரீதியில் பிரபல தயாரிப்பாளர்கள் 30 பேர் சூர்யாவின் டிஜிட்டல் ரிலீஸ் திட்டத்துக்கு ஆதரவு அறிக்கை வெளியிட்டனர்.

இதனால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் டிஜிட்டல் ரிலீஸ் விவகாரத்தில் அரசு தலையிட்டு பேசி தீர்க்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

டிஜிட்டல் ரிலீஸ் முடிவுக்கு சூர்யா வந்தது சரிதானா என பட்டிமன்றங்கள் விவாதங்கள் சமூக வலைதளங்கங்களில் பரபரப்பாக போய்கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில். சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு 30 தயாரிப்பாளர்கள் கூட்டாக ஆதரவு கொடுத்ததற்கு காரணம் வரப்போகும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தான் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் திருமலை.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

உலகம் முழுவதும் கொரானாவால் திரைப்படத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் உள்ளூர் தியேட்டர்களின் நிலை தெரியாமல் ஆண்டுக்கு 12 படங்களை மட்டுமே வாங்கிக் கொள்ளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கும் 30 தயாரிப்பாளர்கள் உண்மையில் டிஜிட்டல் ரிலீசுக்கு ஏன் திடீரென ஆதரவு தருகிறார்கள். அதில் இருக்கும் பல தயாரிப்பாளர்களின் படங்களையே அந்த வெளிநாட்டு நிறுவனம் வாங்கவில்லை.

அதோடு அந்த டிஜிட்டல் நிறுவனம் பிரபலங்கள் நடித்த படங்களை மட்டும் மாதத்திற்கு ஒன்று என வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு 12 படங்களை மட்டுமே வாங்கும். ஆனால் இங்கே ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் தயாரித்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு முதலீட்டு படங்கள்தான் அதிகம்.

தியேட்டரில் ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு சிக்கல் இருக்கிறது என்று தயாரித்தவர்களும் சொல்லவில்லை. எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என டிஜிட்டல் நிறுவனங்களும் கேட்கவில்லை. தயாரித்தவர் விற்றார். டிஜிட்டல் கம்பெனி வாங்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் சிவா தலைமையில் தேர்தலில் நிற்கும் 30 தயாரிப்பாளர்கள் திடீரென டிஜிட்டல் ரிலீசுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்க தேர்தலை மனதில் வைத்துதான்.

அதோடு, 30 பேர் கூட்டறிக்கையில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவின் படத்தையே இந்த அமேசான் நிறுவனம் வாங்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வெளிநாட்டு கம்பெனிக்கு ஆதரவு தெரிவித்து யாரை காப்பாற்ற போகிறார்கள். உண்மையில் கஷ்டத்தில் இருக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை இந்த முடிவு கண்டிப்பாக காப்பாற்றாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு CTH திட்டத்தை கொண்டுவந்த பிரபல இயக்குனர் சேரனின் முயற்சிக்கு இப்போது குரல் கொடுக்கும் யாருமே ஆதரவு தரவில்லையே ஏன்? தனது படங்களின் மூலம் தேசிய விருதுகளை வாங்கி தமிழ் சினிமாவுக்கு பேர் வாங்கித்தந்தவருக்கே ஆதர்வு தராததவர்கள் இப்போது யாரை காப்பாற்ற களம் இறங்கி இருக்கிறார்கள்.

அதே போல தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் கூட வராத முரளி ராமசாமி திடீரென அறிக்கை வெளியிடுகிறார். காரணம் அவரும் தனி அணி அமைத்து சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அந்த அறிக்கையில் அவர் கையெழுத்து கூட இல்லை.

இதுபோன்ற தேர்தல் கால அரசியலை செய்யாமல் உண்மையில் அனைத்து தயாரிப்பாளர்களையும் அரவணைத்து காப்பாற்றும் தலைமை ஏற்பட்டால்தான் தமிழ் திரையுலகை இதுபோன்ற சிக்கல்களில் இருந்து மீட்க முடியும்.

தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் என திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும். இதை முன்னெடுக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுபவம் மிக்க தலைமை ஏற்பட்டால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.

இவ்வாறு தயாரிப்பாளர் திருமலை கூறியுள்ளார்.

572 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன