
கொரானா சுவாரஸ்யம்… கடைக்கு போய் காதல் மனைவியோடு வந்த மகன்… சைக்கிளில் போய் கல்யாணம் செய்த வாலிபர்!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்து கொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்து இவர் மட்டும் வீடு திரும்பினார்.
இதற்கிடையில் எப்படியும் திருமண சான்றிதழ் வாங்கிவிடலாம் என்ற முயற்சி கொரானாவால் தடை பட்டது.
இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் ஹூடுவிடம் நிலைமையை சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில், காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை அவரது தாயார் நேற்று மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு நேரடியாக தனது மனைவி சுவேதா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை அங்கிருந்து காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
மளிகை பொருட்களை வாங்கச்சென்ற தனது மகன் இளம் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்து இவர்தான் உங்கள் மருமகள் என கூறியதால் அதிர்ச்சியடைந்த ஹூடுவின் தாயார் இருவரையும் வீட்டின் வாசலிலேயே நிற்கவைத்தார்.
மேலும், தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதாலும், மளிகைக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மருமகளை அழைத்து வந்ததாலும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
இதனால் தனது மகனையும், அவனது மனைவியையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஷகீபாபாத் பகுதி போலீசார் மகன் ஹூடுவையும், மருமகள் சுவேதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கும்படி அந்த பெண்ணிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஊரடங்கு முடியும் வரை தம்பதிகள் இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்துவைத்துள்ளனர்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு வித்தியாசமான கல்யாண கதையும் அதே உ.பி.மாநிலத்தில் தான் நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கல்கு பிரஜாபதி (வயது 23). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த வாலிபருக்கும், மகோபா மாவட்டம், புணியா கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இரு தரப்பு குடும்பத்தினரும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக முடிவு செய்தனர்
கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
திட்டமிட்டபடி திருமணம் முடிக்க மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி கேட்டும் அனுமதி தாமதம் ஆனது.
வேறு வழியின்றி 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று திருமணம் முடித்து புது பெண்ணுடன் அதே சைக்கிளில் ஊர் திரும்பி இருக்கிறது இந்த ஜோடி.
கொரானா காலத்தில் இப்படி பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

