வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!

 

தென்னிந்திய டப்பிங் யூனியனில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வாங்கிக் கொண்டு கணக்கில் ரூ.324 என்று குறிப்பிட்டு பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்னிந்திய டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி பதவி வகிக்கிறார். இவர் மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்ற வகையில் நில மோசடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பண மோசடி, நில மோசடி வழக்கில் காஞ்சிபுரம் போலீசில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில் ராதாரவி எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்பட்ட போது திடீரென மத்தியில் ஆளும் பி.ஜே.பி கட்சியில் போய் சேர்ந்தார் ராதாரவி.

நடிகர் சங்க வழக்கின் நிலை கேள்விக்குறி ஆன நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு பெறப்படும் தொகையை கணக்கில் காட்டாமல் பெயரளவில் 354, 400, 500 என ஆளுக்கு தக்க வரவு வைக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதுபோல 2014, 2015, 2016, 2017 ஆகிய நான்கு ஆண்டில் உறுப்பினர்கள் சேர்க்கை, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை என விவரங்கள் குறிப்பிடப்பட்ட ஆண்டறிக்கை வெளியாகி உள்ளது.

அதன்படி 2014ம் ஆண்டில் 61 புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் அவர்களிடமிருந்து தலா ரூ. 566 பெறப்பட்டதாம். அந்த வகையில் 34,526 ரூபாய் சங்கத்துக்கு வந்ததாம்.

அதே போல, 2015ம் ஆண்டில் 38 புது உறுப்பினர்கள் மூலம் தலா ரூ.461 வசூலிக்கப்பட்ட மொத்த தொகை 17,500.

அடுத்ததாக 2016ம் ஆண்டில் 24 புது உறுப்பினர்கள் சேர்க்கையில் தலா ரூ.354 மூலம் வந்த தொகை 8,500

2017ம் ஆண்டில் 31 புது உறுப்பினர்கள் மூலம் தலா ரூ. 516 பெறப்பட்ட வகையில் ரூ.16 ஆயிரம் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கணக்குக்காக கட்டப்பட்ட இந்த தொகையை விட நிஜத்தில் டப்பிங் யூனியன் உறுப்பினர் ஆக ரூ.1.5 லட்சம் வசூலிக்கப்படுகிறதாம். இதில் ராதாரவி “அன்பை” பெற்றால் தொகை குறையும், தவணைகளில் கட்ட சலுகை கிடைக்கும். யாராவது எதிர் கேள்வி கேட்டால் அவர்களை சங்கத்தில் இருந்து நீக்குவது அல்லது அவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது எல்லாம நடக்கிறதாம். அப்படியே கணக்கு கேட்டாலும் அது நன்கொடையாக வந்தது என்று மாற்றிக் கொள்வார்களாம். அப்படி பெறப்படும் தொகைகளும் முறையாக கணக்கில் வருவதில்லை என்பதுதான் இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு.

சரி இந்த கூத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சொந்த அலுவலக கட்டிடத்தில் பத்து பதினைந்து பேரை மட்டுமே வைத்து நடத்தப்படும் சங்க செயற்குழு கூட்டத்தின் செலவு 3.5 லட்சம் என கணக்கெழுதி சாதனை படைத்ததும் இதே ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் தான் என்பதை தனியாக குறிப்பிட தேவையில்லை.

அதோடு டீ காபி செலவு என பல ஆயிரங்கள் கணக்கு, அதேபோல “உற்சாகப்படுத்திக் கொண்ட வகையில்” என பல ஆயிரங்கள் கணக்கு இப்படி வரவுசெலவு தாக்கல் செய்ததில் பல கோடி முறைகேடாக எடுக்கப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் பல உறுப்பினர்கள்.

உறுப்பினர்கள் சேர்க்கைக்கு இப்படி லட்சக்கணக்கான ரூபாய் பெறுவதோடு, ஒவ்வொரு உறுப்பினர் சம்பளத்திலும் சங்க உறுப்பினர் நல நிதி என 10 சதவீதம் பிடித்தம் செய்த தொகை மட்டும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தனை கோடிகள் வசூலித்த டப்பிங் யூனியன் இந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் சிரமப்படும் தனது உறுப்பினர்களுக்கு சங்கத்தில் பிடித்தம் செய்த தொகையில் இருந்து ஒரு பைசா கூட நிவாரணமாக தரவில்லை என்றும், பெப்சி கொடுத்த நிவாரண பொருட்களையும், 500 ரூபாய் ரொக்கத்தையும் கூட முழுமையாக வழங்கவில்லை என்றும் பல உறுப்பினர்கள் புலம்பி வருகிறார்கள்.

இதெல்லாம் விட நலிந்த உறுப்பினர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வசதி படைத்த உறுப்பினர்கள் நிதி கொடுங்கள் என தகவல் அனுப்பி கொரானா நிதியும் தனியாக வசூலிக்கப்பட்டது அந்த தொகையும் பல லட்சம் அதில் இருந்தும் எந்த ஒரு நலிந்த உறுப்பினருக்கும் ஒரு ரூபாய் கூட நிவாரண நிதியாக தரப்படவில்லை என்பதும் உறுப்பினர்கள் புலம்பலுக்கு காரணம்.

சங்க உறுப்பினர்கள் வாழ்வாதார சிக்கலில் இருக்கும் போது சங்கத்தின் தலைவர் ராதாரவி குளுகுளு ஊட்டியில் குடும்பத்தோடு ஓய்வெடுக்க பயணம் செய்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

– கோடங்கி

907 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன