
இந்தி தெரியாது என்றதால் “நீங்கள் இந்தியரா?” என கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்டு சர்ச்சையை எழுப்பிய விமான நிலைய பெண் அதிகாரி!
டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி, இந்த விஷயத்தை பதிவிட்டு, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார்.
இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி எம்.பி.யின் இந்த பதிவு அனைத்து தரப்பு மக்களிடமும் கடும் அதிர்ச்சியையும், அந்த பெண் அதிகாரி மீது கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரபலமான அரசியல் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி என்பதும், அவர் நீண்டகால மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படி இருக்க சென்னை விமான நிலையத்தில் ஒரு பொறுப்பான அதிகாரியின் இந்த செயல் ஏதோ திட்டமிட்டு வம்புக்கு இழுப்பது போல தெரிகிறது.
ஏற்கனவே மும்மொழி கொள்கை என இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு திமுக உட்பட தமிழகத்தின் அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். போதா குறைக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது
