வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!

 


ஈஸ்வரன் படத்தில் சிம்பு வைத்திருப்பது கிராபிக்ஸ் பாம்பு தான் என கூறிய இயக்குனர் சுசீந்திரனிடம் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரிலேயே சிம்பு கழுத்தில் பாம்பு இருப்பது போன்றும் அதை சிம்பு கைகளால் பிடித்து இருப்பது போலவும் ஒரு புகைப்பட பதிவு வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வனத்துறை மத்தியில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது போல ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியது, அதாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாம்பை சிம்பு கையால் பிடித்து சாக்கு பையில் போடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  மிகவும் வைரல் ஆகியது. இந்நிலையில் வனவிலங்குகளை துன்புறுத்துவதாக கூறி நடிகர் சிம்பு மற்றும் படக்குழுவினர் மீது வன விலங்கு நல ஆர்வலர்கள் சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

ஏற்கனவே சிம்பு மற்றும் இயக்குனர் சுசீந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதற்கு பதிலாக சுசீந்திரன் விளக்கம் அளித்து இருந்தார். இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கூறுகையில், சிம்பு கழுத்தில் போட்டு இருப்பது பிளாஸ்டிக் பாம்புதான் எனவும், வீடியோவில் சிம்பு கைகளால் பாம்பை பிடிப்பது போல இருப்பது பிளாஸ்டிக் பாம்பு தான் ஆனால் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை வனத்துறையினருக்கு சமர்ப்பிக்கும்படி ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் இன்னும் இது குறித்த ஆவணங்கள் தராததால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்தின் ஒரு காட்சியில் மரக் கிளை ஒன்றில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போலவும், அந்தப் பாம்பை சிம்பு தன் கையால் பிடித்து சாக்குப் பையில் போடுவது போலவும் காட்சி படமானது. இந்தக் காட்சியை படத்தின் விளம்பரத்திற்காக வீடியோவில் வெளியிட்டார்கள். அதுவே இப்போது வினையாகிவிட்டது.

“விலங்குகளை கிராபிக்ஸ் காட்சியில் காட்டினாலும் தடையில்லா சான்று பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும்…” என்ற விதி இருப்பதை மத்திய விலங்குகள் நல வாரியம் சுட்டிக் காட்டி, இது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

“அதுவரை  ஈஸ்வரன் பட போஸ்டர் ,  டீசரை வெளியிடக்கூடாது” என்றும்  விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது

281 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன