
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலையை அவமதித்ததை மோசமான செயல் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி விவரித்தார்.
அமெரிக்க தலைநகரில், காலிஸ்தானிய பிரிவினைவாதிகளின் ஒரு வன்முறைக் குழு, கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலையை இழிவுபடுத்தியது.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மெக்னானி, ”இது பயங்கரமானது. எந்த சிலையும் அல்லது நினைவுச்சின்னமும் அழிக்கப்படக்கூடாது. நிச்சயமாக அமெரிக்கா அமைதி, நீதி மற்றும் சுதந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்காக போராடிய காந்தியைப் போன்றவர்களுக்கு உயரிய மரியாதை அளிக்கிறது.
இது ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்ததற்காக வருத்தப்படுகிறேன். மகாத்மா காந்தியின் நற்பெயர் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக இங்கே அமெரிக்காவின் தலைநகரில்.” என்று அவர் கூறினார்.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன் அண்மையில் நடந்த போராட்டங்கள் குறித்து தாங்கள் அறிந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
“அமெரிக்காவில் வெளிநாட்டு தூதகரங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அண்மையில் நடந்த சம்பவத்தை இந்திய தூதரகத்துடன் விவாதித்து வருகிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கிரேட்டர் வாஷிங்டன் டி.சி பகுதி, மேரிலாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள வர்ஜீனியா, நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, இந்தியானா, ஓஹியோ மற்றும் வட கரோலினா போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் சனிக்கிழமையன்று வாஷிங்டன் டி.சி நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கார் பேரணியை மேற்கொண்டனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இந்திய விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், அமைதியான போராட்டம் விரைவில் இந்திய எதிர்ப்பு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளுடன் காலிஸ்தானிய கொடிகளை ஏந்தியிருந்த பிரிவினைவாத சீக்கியர்களால் முன்னெடுக்கப்பட ஆரம்பித்தது. போராட்டத்தின்போது, காலிஸ்தான் ஆதரவு சீக்கிய இளைஞர்கள் பலர் கிர்பன்களை ஒளிரச் செய்து மகாத்மா காந்தியின் சிலை மீது குதித்து அதன் மீது ஒரு சுவரொட்டியை ஒட்டினர். இந்த குழு இந்தியா எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பியது.
இதையடுத்து மகாத்மா சிலை அவமதிக்கப்பட்டதற்கு எதிராக இந்திய தூதரகம் கண்டன அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆண்டு காந்தியின் சிலை குற்றவாளிகளால் இழிவுபடுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக மே 25 அன்று மினியாபோலிஸில் ஆபிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த வாரத்தில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
