
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இன்னமும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல உலக நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் மியூட்டேட் அடைந்து இரண்டாவது அலையாக முன்பை விட வீரியத்துடன் பரவ தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. பல நாடுகளும் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டன. பிரிட்டன் தான் உலகிலேயே முதலில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கிய நாடு.ஆனால் இப்போது அங்கு தான் உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரிட்டனில் 50,023 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த பாதிப்புகளை விட இவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது இதன்மூலம் தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். இதனால் பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் கூட உருவாகலாம். இப்படியான ஒரு சூழலில் இங்கிலாந்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் சுமார் 1,500 பணியாளர்கள் அணைத்து பள்ளிகளுக்கும் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பரிசோதனை நடத்தப்படும், இதற்காக 78 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, பள்ளிகளுக்குத் தேவையான அணைத்து கருவிகளும் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
