
கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும் கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார்.
பல முறை மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையினர் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால் மனம் உடைந்த அவர் கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்கொளுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இணையத்தில் கேலிச் சித்திரம் வரைந்த லைன்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். நெல்லையைச் சேர்ந்த போலீஸார் சென்னையில் அவரை இன்று கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே, பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது, சமூக செயற்பாட்டாளரான முகிலன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றால் நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த நிலையில், காவல்துறைக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் செம்மணியை நேற்று முன்தினம் நள்ளிரவு இரும்புக் கம்பியால் காலில் அடித்து நடக்க முடியாத அளவுக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்தச் சூழலில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது விவகாரமும் நெல்லை மாவட்ட காவல்துறையினர் மீது கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.

பாலாவின் கார்ட்டூன்கள் சில…
இதையடுத்து, கார்ட்டூனிஸ்ட் பாலா கைது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், ’’நெல்லை மாவட்ட அரசு உயரதிகாரிகள் பற்றி அருவருப்பான கார்ட்டூன்களை வரைந்து சென்னையைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அதன் மீது கடந்த நவம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 501 ஐ.பி.சி மற்றும் 67 ஐ.டி சட்டம் ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஞானையா என்பவரின் மகன் பாலா என்ற பாலகிருஷ்ணனை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்’’ எனத் தெரிவித்து உள்ளார்.
