வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

டெல்லி விவசாய பேரணியில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஜக ஏஜெண்டா?- பிரதமருடன் இருக்கும் புகைப்படம் வெளிட்ட காங்கிரஸ்

செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. அவர் தன்னை விவசாய ஆர்வலர் என்று கூறிக் கொண்டு, போராட்டத்தை சிதைக்க வந்த ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்று விவசாய அமைப்பினர் விமர்சிக்கின்றனர்

டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சிக்கிம் மத கொடியையும் விவசாய கொடியையும் ஏற்றியதே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மூவர்ணக் கொடியை கீழிறக்கி விட்டு, இந்தக் கொடிகளை ஏற்றியது கண்டனத்துக்குரியது என்று பலரும் கூறி வருகின்றனர்

தற்போது கொடி ஏற்றியவர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாபி திரைப்படங்களில் நடித்து, தற்போது விவசாய செயற்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தீப் சித்து என்பவர் தான் அந்தக் கொடியை செங்கோட்டையில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

“சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர்தான் செங்கோட்டையில் ஏறி கொடியேற்றியவர். இவர் எப்படி விவசாயிகள் மத்தியில் வந்தார்? போராட்டத்தின் பெருமையை சிதைக்க வந்த இந்த சதிகாரனை யார் அனுப்பியது? சதி விரைவில் அம்பலத்திற்கு வரும்!” என்று குறிப்பிட்டுள்ளார் ட்விட்டரில் தமிழ்நாடு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்.  இதுதொடர்பாக  வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியுடன் தீப் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைத்திருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

 

 

 

ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தோன்றிய தீப் சித்து, விவசாயிகளின் நலனுக்காக பாடுபட போவதாகக் கூறி சம்பு மோர்ச்சா என்ற விவசாய அமைப்பை உருவாக்கினார். ஆனால், இதற்கு முன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சன்னி தியோலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் விவசாய சங்க தலைவர்கள் இவரை புறக்கணித்தே வந்தனர். இவர் ஒரு ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்றும் விமர்சிக்கின்றனர். தேவையில்லாமல் பேரணிக்குள் ஊடுருவி விவசாயிகளின் போராட்டத்தையே திசை திருப்பி விட்டதாகவும் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர். விவசாயிகள் கூறிய அந்த விஷமி இவர் தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

290 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன