செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று விற்பனையாளர் சங்கம் அறிவித்து இருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இன்று காலையில் இருந்து சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழியர்கள் கண்காணித்தனர்.

முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பப்பட்டது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் தீவிரமாகி வருகின்ற சூழலில் இந்த நடவடிக்கை பயன் அளிக்கும் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.
சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குடும்பத்தோடு பெட்ரோல் போட வந்த சிலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அதனால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.

ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தி வழங்கினார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், இளைஞர்கள் முகக்கவசம் அணிந்து பெட்ரோல் நிரப்பி சென்றதை காணமுடிந்தது.

168 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன