புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்

 

ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் தட்டுப்பாடுகளினால் கொரோனா நோயாளிகள் மரணமடைவது இனப்படுகொலைகளுக்கு குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது

கொரோனா பரவல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் நிலவரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடுகளினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சற்றும் குறைந்ததல்ல

நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும் போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா? என உத்தரபிரதேச அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் குறித்து வரும் விமர்சனங்களைக் கொண்டு நாங்கள் எங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்பதில்லை. ஆனால் இந்த பொதுநல வழக்கின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் இத்தகைய சமூக ஊடக செய்திகளின் உண்மைத் தன்மையை நம்புகின்றனர். இதே போல்தான் பிற மாவட்டங்களிலும் இருக்கிறது என்று அத்தகைய செய்திகளுக்கு ஆதரவு அளிக்கின்றனர். அதனால் உடனடியாக இதற்கு தீர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து லக்னோ, மீரட் நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். லக்னோ, மீரட் மாவட்ட ஆட்சியர்கள் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதிகள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடால் கொரோனா நோயாளிகளையே புறக்கணிக்கும் போக்குகளும் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு கண்டித்துள்ளது

260 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன