வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

 

நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விஷால் நடிக்கும் இரும்புத்திரை என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. அம்பை ஆற்றுச்சாலை, தாமிரபரணி ஆறு, அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதற்காக அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி, ராணுவ பயிற்சி மையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராணுவ மையத்தில் இருந்து விஷால் வெளியே நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

இதற்கிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் கலந்துரையாடல் நடத்தினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

புதுப்படங்களின் பாடல் காட்சிகள் மற்றும் டிரைலர் காட்சிகளை மற்றும் புதிய படங்களை விழா காலங்களில் தயாரிப்பாளர்கள் அனுமதி இல்லாமல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திரையிடக் கூடாது. இதற்காக தயாரிப்பாளர்கள் சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்களிடம் கட்டணம் செலுத்தி, முறையான அனுமதி பெற்று புதிய படங்களான சிறிய படங்களையோ, பெரிய படங்களையோ வெளியிடலாம். அனுமதி இல்லாமல் வெளியிடப்படுவதை கண்காணிப்பதற்கு என தனியாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி இல்லாமல் வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மாவட்டம் வாரியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நிர்ணயம் செய்து புதிய படங்கள் வெளியிடப்படும். கந்துவட்டி கடன் தொல்லையால் தயாரிப்பாளர் அசோக்குமார் இறந்த பிரச்சினையில் தமிழக அரசும், காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.

 

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர். கேபிள் டி.வியை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இடைத்தரகர்கள் இல்லாமல் அச்சமின்றி நேர்மையுடன் சுதந்திரமாக தொழில் செய்யவும் கேபிள் டி.வி தொழிலை முறைப்படுத்தி வருமானத்தை பெருக்கவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்து உள்ளது.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கேபிள் டி.வி.உரிமையாளரையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நேரடி தொடர்பில் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான விண்ணப்பங்கள், ஆவணங்கள் பெறுவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

206 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன