உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.

2-வது இன்னிங்சில் மட்டும் இந்திய அணி கூடுதலாக ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்திருந்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்து கோப்பையை பகிர்ந்திருக்கலாம். அவ்வாறு தான் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை நமது நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பி வெறுப்பேற்றிவிட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த2000ம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியதே நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பாக பார்க்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் ஒரு ட்ராவையும் அந்த அணி கண்டுள்ளது.
வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

