திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பலியான நிலையில், கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி  போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி  போடப்பட்டது.

காலை 7 மணியில் இருந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட கலெக்டர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி  போடாத மக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத்தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்தன.

இதனால் இன்று காலையில் தடுப்பூசி  முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் முதலுதவி சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதனால் நிறைய முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தடுப்பூசி  மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னையை பொறுத்தவரை 1,600 சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணியில் இருந்தே தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி போட முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து முகாம்களிலும் காலை 8 மணிக்கே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தையே இது வெளிப்படுத்தியது.

ஒவ்வொரு வார்டிலும் 2 நடமாடும் தடுப்பூசி  முகாமும் செயல்பட்டது. ஒரே இடத்தில் நடமாடும் முகாம்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன.

சென்னையில் 600 டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 7000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் சிறப்பு முகாம்கள் எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று 2 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் இந்த தொலைபேசியில் முகாம் நடைபெறும் இடங்களை கேட்டறிந்து கொண்டனர்.

 

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன