திங்கட்கிழமை, மே 4
Shadow

ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது.

கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும், இதுவரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல்  போலீசார் சோதனை நடத்தியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும். அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரிய வழக்கு இன்று , அல்லது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தீர்ப்பின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி வழக்கை சந்திப்பார் என அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் ஏன் சோதனை மேற்கொண்டனர்  என்பது குறித்து மதுரை மாவட்ட SP பாஸ்கரன், பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஜனவரி 7 ம் தேதி ஒத்தி வைத்தது.

512 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன