கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்!
கஞ்சா கிடைக்காத காரணத்தால் கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் நட்டு வைத்து செடியாக வளர்த்த கில்லாடி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவல் அடிப்படையில் நல்லூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, முத்தம்பாளையம், வாய்க்கால் மேடு பகுதியிலிருந்து செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு பனியன் கம்பெனி ஹாஸ்டலில் பூச்செடிளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விடுதியில் இருந்த 8 நபர்களிடம் போலீசார் விசாரித்தனர்
அப்போது ஹாஸ்டலில் வசிக்காத வெளி நபர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
போலீசார் விசாரனையில் அந்த வாலிபர் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பார்த்தீபன் (வயது 25) என்பது தெரிய வந்தது.
இவர் திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
வெளியில் கஞ்சா பொட்டலங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், உடனே கஞ்சா செடி வளர்க்க முடிவு செய்து உள்ளார் பார்த்திபன்.
அவர் வேலை செய்யும் இடமான செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு எதிரே உள்ள ஹாஸ்டலில் கஞ்சா செடியை விதைத்து தண்ணிர் விட்டு வளர்த்து வந்திருக்கிறார்.
அதுவும் அங்கு உள்ள பூச்செடிகளுக்கு மத்தியில், பூச்செடிகள் வளர்ப்பது போல தொட்டியில், கஞ்சா விதைத்து, பூச்செடி வளர்ப்பவர் போல பக்குவமாக மாதக்கணக்கில் தண்ணீர் விட்டு கஞ்சா செடியை வளர்த்து இருக்கிறார்.
நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 அடி உயரத்தில் இருந்த 4 செடிகள், 1 அடி உயரத்தில் 3 செடிகள் என 7 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

