வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

 

* தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப்பதாக கூறியுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மசோதாவை முழுமையாக ஆதரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தொன்மையான சிலைகளை ஆய்வு செய்து, பதிவு செய்யப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்லூரிகளுக்கு வரும் 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் குவிந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லுயிர் படிமங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலையில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத உண்டியல் வருவாயாக, ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தனக்கு நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

பசுமை எரிசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மாவட்ட அளவில் கொரோனாவை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் செயல்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது

சிவகங்கை அருகே பழுதடைந்து இயங்காமல் இருந்த இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து காவலர்கள் 200 ரூபாய் அபராதம் விதித்ததாக உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே உள்ள குட்டையில், மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், திங்கட்கிழமை வரை கூடுதல் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரேஷன் கடைகளில் வரும் 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் வரும் 12 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கவிருந்த மோடி பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இதனைத் தெரிவித்தார்.

12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வை உடனடியாக நடத்த கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் தர மாட்டோம் எனக் கூறி நில உரிமையாளர்கள் கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர்.

லடாக்கில் உள்ள கர்துங் லா வழியாகச் செல்லும் உலகின் இரண்டாவது மிக உயரமான சாலை கடும் பனிக்காலத்திலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பனிச் சிற்பங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன