செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை

 

திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது.

பிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார்.
இந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, “மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன், அதன் விளைவே இந்தச் செயலி. இந்தச் செயலிக்கான வேலையை 2012-ம் ஆண்டே ஆரம்பித்துவிட்டேன்.

யாரோ ஒருவர் ‘ஆப்’ ஆரம்பித்தவுடன் சரத்குமாரும் அவசரத்தில் ஆரம்பித்துவிட்டான் என எண்ண வேண்டாம். ‘நாடென செய்தது உனக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு’ இவ்வரிகளிலேயே இந்தச் செயலி ஆரம்பித்ததற்கான பதில்கள் இருக்கு. அரசாங்கம், ஆட்சியாளர்கள், மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நல்ல சமூகம் உண்டாகும். அப்படி ஓர் ஒருங்கிணைப்புக்கே இந்தச் செயலி.

கமல் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தச் செயலி ‘இண்டராக்டிவ்’ எனச் சொல்லப்படும் ஊடலாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் ஈடுபட்ட பிறகு மக்களைச் சந்திக்கும்போது பல குறைகளை மக்கள் மனுவாகக் கொடுப்பார்கள். அந்த மனுக்கள் படிக்கப் பட்டதா என யாருக்கும் தெரியாது. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி சிலரைப் பணிக்கிறோம்.

 

அவர்கள் அதை செய்தார்களா, அந்தக் குறைத் தீர்க்கப்பட்டதா எனக் கண்காணிக்க இந்தச் செயலி உதவியாக இருக்கும். எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வாய்ஸ் மற்றும் வீடியோ பதிவு முறையும் இந்தச் செயலியில் உள்ளது. நம்மில் நிறையபேருக்குக் குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை நேராகக் கூற தைரியம் இருக்காது. அவர்கள் தங்கள் குறைகளை, கருத்துகளைப் பகிர்வதற்குதான் இந்த ஆப்.’’

“இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்களில் ஒருவனாய் கடந்த 21 ஆண்டுகளாக நான் பொதுப்பணியில் இருக்கிறேன். இன்று அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கு என்கிறார்கள், நான் அதை உபயோகப் படுத்திக்கொள்ள இதை ஆரம்பிக்கவில்லை. உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அரசியல் புகட்டி முதல்வர் அரியணையில் உட்கார வைக்கும் நோக்கமாகவே இந்த ‘ஆப்’ உருவாக்கப்பட்டது. ஏற்ற சுழலும், வசதியும் வந்தபிறகு, நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என சரத்குமார் கூறினார்

320 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன