
ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார். ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.


பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத்தையும் தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் பறிமுதல் செய்தார். அந்த நோட்டில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டு, 15 குடும்பத்தினருக்கு பணம் விநியோகிக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆண் வாக்காளர்கள் எத்தனை, பெண் வாக்காளர்கள் எத்தனை என்ற விவரங்களும் அடங்கியிருந்தன. அவற்றை தங்க தமிழ் செல்வன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடக்கும் நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி திமுகவினர் காவல்நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் பணி இறுதிக்கட்டமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும 4 நாட்களே உள்ள நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலரின் வீடுகளில் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருப்பதாக திமுகவினர் நேரில் அவர்களே களத்தில் குதித்து வீடுவீடாக சென்று பணம் பதுக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
ஆர்கே நகரில் ஆங்காங்கே போலீசாரின் உதவியுடன் ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆர்கே நகரில் ஆங்காங்கே காவல் நிலையங்களை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திற்குள் ஊடகங்களுடன் நுழைந்து பண விநியோகம் செய்பவர்கள் மீது புகார் பதிய வலியுறுத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார். ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்த போது காவல்துறையினர் வழக்கு பதியவில்லை, அமைச்சர்கள் வீதி வீதியாக முகாமிட்டு பண விநியோகம் செய்து வருவதாகவும் மருதுகணேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
